அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் அல்தமஸ் கபீர், ஏ.கே. பட்நாயக், இதை   விசாரிப்பதற்கான அதிகாரம் இந்த பெஞ்ச்க்கு இல்லை. எனவே வேறு பெஞ்ச் இதை விசாரிக்கலாம் என்று பரிந்துரைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் ஆர். வீ. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.மனுவைப் பரிசீலித்த நீதிபதி ரவீந்திரன், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அதேநேரத்தில் நீதிபதி கோகலே, சமரசத் தீர்வு காண்பதற்கு முயற்சிக்க ஒரு வாய்ப்பளிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். மாறுபட்ட கருத்து இருந்தாலும் நீதிபதி கோகலேவின் கருத்தை நீதிபதி ரவீந்திரனும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க ஒரு வாரம் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும்  வழக்கில் தொடர்புடைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. அட்டார்னி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக திரிபாதி சார்பில் வாதிட்ட முகுல், இந்த வழக்கு இரு தரப்பினருக்கு மட்டும் தொடர்புடையது அல்ல. லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்புடையது. சமரச முயற்சி மூலம் சுமுகத் தீர்வு காண்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.  இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.யு.கான், டி.வி.சர்மா, சுதிர் அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வமுள்ளதா என கேள்வி எழுப்பியது. ஆனால், அவர்கள் ஆர்வமில்லை எனத் தெரிவித்ததும், இந்த மனுவில் எந்த சாரமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்திருப்பது "விஷமத்தனமானது' என்றும், "தூண்டப்பட்டது' என்றும் கூறி திரிபாதிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததோடு |50 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்தது தொடர்பாக மற்றொரு நீதிபதி டி.வி. சர்மா அதிருப்தி தெரிவித்தார். மனுவைத் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவில் நீதிபதி சர்மா கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது.அதேபோல, திரிபாதிக்கு |3 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும், மனுவைத் தள்ளுபடி செய்யும் முன் தன்னை மற்ற நீதிபதிகள் கலந்தாலோசிக்கவில்லை எனவும் நீதிபதி சர்மா குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில்தான் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.சமரசத்தில் ஒற்றுமையைக் காட்டுங்கள்- நீதிபதிநிலம் யாருக்கு என்கிற தீர்ப்பு வெளியானால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும், மதக் கலவரம் வெடிக்கும். எனவே தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிடுங்கள் என்று திரிபாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோட்டகி மீண்டும் வலியுறுத்திகொண்டிருந்தார்.அப்போது குறுக்கீட்ட நீதிபதி, ""மக்கள் எல்லோரும் பக்குவம் இல்லாதவர்கள் என்று நீங்களாக ஏன் கருதுகிறீர்கள்? மத உணர்வுகள் தூண்டப்படும்போதுதான் மக்களும் அதற்குப் பலியாகின்றனர். நீங்கள் சும்மா இருங்கள், எல்லாம் சரியாகவே நடக்கும்' என்றார்."ஐயா, நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அது நொந்த மனங்களுக்கு ஆறுதலை வழங்கும்; சம்பந்தப்பட்டவர்கள் அமர்ந்து பேசி சமரசமாகப் போக வழி உண்டா என்று பாருங்கள் என்று நீங்கள் ஒருமுறை சொல்லித்தான் பாருங்களேன்' என்றார் ரோட்டகி."தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ள திரிபாதி, இந்த வழக்கில் தீவிரப் பங்கு வகிக்காதவர்; இதற்கு முன் உயர் நீதிமன்றத்தில்ó நடந்த விசாரணைகளில் அவர் பங்கேற்கவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியாகும் வேளையில் இதுபோன்று மனுச் செய்வது நியாயமில்லை. பிரதமர் அளவில் சமரச முயற்சிகள் செய்தும் பலனில்லை. எனவே தீர்ப்பு வெளியாக வேண்டும் என்று பிரதிவாதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனூப் செüத்ரி கூறினார். இதே கருத்தை வாதி தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.தீர்ப்பை ஒத்திவைக்கக் கூடாது என்பதில் வழக்கின் இரு தரப்பினரும் காட்டும் ஒற்றுமையை பிரச்னைக்கு சமரசமாகத் தீர்வு காண்பதில் காட்டுங்கள் என்றார் நீதிபதி.இந்த வாதத்தை நீதிபதி ரவீந்திரன் ஏற்கவில்லை. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் கூறினார்.மேலும் தாமதமாகும்?அயோத்தி வழக்கில் செப்டம்பர் 29-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படாவிடில் மேலும் நீண்ட காலம் தாமதமாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் ஒருவர் செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓய்வுபெற்றால் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு அவர், வழக்கை புதிதாக நடத்தி, விசாரித்த பின்னரே தீர்ப்பு வழங்க முடியும்.

0 comments: